• Sat. Oct 12th, 2024

பள்ளி மாணவர்களுக்கு இனி சனிக்கிழமையும் வாரவிடுமுறை..!

Byவிஷா

Apr 18, 2022

1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கபட்டன. இதனையடுத்து கொரோனா தொற்று குறைந்த நிலையில், கடந்த நவம்பர் முதல் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் டிசம்பர் இறுதியில் கொரோனா முன்றாம் அலை உச்சமடைந்ததையடுத்து அனைத்து வகுப்பு பள்ளிகளும் மூடப்பட்டன.
பின்னர் ஜனவரி இறுதியில் கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளை விட குறைவான எண்ணிக்கையில் பதிவாகின. இதனையடுத்து பிப்ரவரி மாதம் முதல் மழலையர், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் மே மாதத்தில் இறுதித்தேர்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை அளிக்கபட உள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக கோடை வெப்பத்தின் தாக்கத்தால் பள்ளிகளுக்கு ஏப்ரல் 20-ம் தேதி வாக்கில் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தாமதமாக திறந்ததால் முழு ஆண்டு தேர்வுக்குள் பாடத்திட்டத்தை முடிப்பதற்காக ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஆன நிலையிலும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் பல இடங்களில் கோடை வெப்பம் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. இதனால் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெற்றோரிடம் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சனிக்கிழமைகளில் விமுறை விட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த தகவலில்,”
கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டது. இதன், காரணமாக அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் சனிக்கிழமை நாட்களில் விடுமுறையை அறிவிக்க பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த, கோரிக்கையை ஏற்று 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சனிக்கிழமையும் விடுமுறை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார். மே 15 தேதி வரை பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால் இந்த முறை கோடை விடுமுறை குறைக்கப்பட்டு வரும் ஜூன் 13 இல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *