பகலில் வெயில் வெளுத்துவாங்குகிறது மாலை 3 மணிக்கு மேல் மேகங்கள் கூடி மழை பெய்யத்துவங்குகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக இது தான் நிலை. அவ்வப்போதும் பெய்யும் கோடை மழையால் குளிச்சி நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை (12-ம் தேதி) 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று (11-ம் தேதி) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (12-ம் தேதி) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 13, 14, மற்றும் 15-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 – 49 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 – 29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு இன்றும், நாளையும், வட கேரளா – கர்நாடக கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிக்கு இன்றும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
நாளை கொட்டப்போகுது மழை..தமிழகத்தின் 8 மாவட்டங்களில்…
