• Sun. Sep 15th, 2024

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை பேச்சு – இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்

ByA.Tamilselvan

Jun 11, 2022

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்தை பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது பா.ஜனதா நடவடிக்கை எடுத்தது. நவீன்குமார் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நுபுர் சர்மா ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் தெரிவித்த கருத்துகளுக்காக மத்திய அரசுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர்சர்மா, ஜிண்டால் ஆகிய இருவரையும் கைது செய்ய கோரி நாடு முழுவதும் நேற்று முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி, ஜூம்மா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து கொண்டு வெளியே வந்தவர்கள் நுபுர்சர்மாவுக்கும், டெல்லி போலீசாருக்கும் எதிராக கோஷமிட்டனர். பெரும்பாலான மாநிலங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடந்தது. சில மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மெயின் ரோட்டில் ஏராளமானவர்கள் குவிந்து நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். அதிக அளவில் மக்கள் திரண்டதால் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டது இருந்தது. மேலும் அந்த பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ராஞ்சியில் பல இடங்களிலும் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்றவகளில் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் போலீசார் காயம் அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினார்கள். மேலும் போலீசார் துப்பாக்கியால் சுட்டும் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள். குண்டு காயம் அடைந்த 2 பேர் அங்குள்ள ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் மருத்துவ அறிவியல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் வழியிலேயே இறந்துவிட்டனர். ராஞ்சி போலீஸ் கமிஷனர் அனுஷ்மான் குமார் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானதை உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 8 பேரும், 4 போலீசாரும் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் முதலில் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடத்தி கைது செய்யப்படுவார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
. உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ, பிரயாக்ராஜ், சஹாரன்பூர், மொரதாபாத், ராம்பூர் நகரங்களில் பேராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இந்த வன்முறையில் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. உத்தரபிரதேசத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக 227 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடையாளம் தெரியாத 5 ஆயிரம் பேர் மீது பிரயாக்ராஜ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நவி மும்பையில் நடந்த கண்டன பேரணியில் ஆயிரம் பெண்கள் உள்பட 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். போராட்டம் அமைதியாக நடந்தது. குஜராத்தில் அகமதாபாத், வதோதரா உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடந்தது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. 9 மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *