

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் எங்களால் வாக்காளர்களை சந்திக்கவே முடியாத நிலையை திமுகவினர் ஏற்படுத்தி உள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம் சாட்டினார்.
சேலத்தில் தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா மற்றும் துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணமக்களை வாழ்த்தி பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக மக்களை வதைப்பதாகவும் ; இந்த நடவடிக்கையால் திமுக கூட்டணி மீது மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் ; இது கட்சியினருக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். கடந்த 18 ஆண்டுகளில் இதுவரை காணாத வகையில் ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவினர் விதிமுறைகளில் ஈடுபடுவதாகவும்; இதுகுறித்து தேமுதிக உட்பட பல்வேறு தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
கிளியை கூண்டில் அடைத்தாலே அபராதம் விதிக்க சட்டம் இருக்கின்ற காலகட்டத்தில் வாக்காளர்களை திமுக கூட்டணியினர் அடைத்து வைத்திருப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய பிரேமலதா பரப்புரை களத்தில் தேமுதிக உட்பட பிற கட்சியினர் வாக்காளர்களின் சந்திக்க முடியாத நிலைக்கு திமுகவினரின் நடவடிக்கை உள்ளதாக தெரிவித்தார். திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் கூறியதை போல் மக்கள் அறத்தோடு வாக்களித்தால் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் தேமுதிக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்த போதிலும் பன்னீர்செல்வம் தரப்பினர் இது தற்காலிகமானது என்று கூறி வருகின்றனர் எனவே அதிமுகவின் நிலை குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் பிரேமலதா கருத்து தெரிவித்தார்.

