


திருமணமான ஒரே வருடத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கருப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் சேலம் நரசோதிபட்டி பெருமாள் மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த தீபிகா (23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் சுரேஷ்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதாகவும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த இளம் பெண் தீபிகா கடந்த வாரம் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்த கருப்பூர் காவல்துறையினர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இரண்டு நாட்களாக காவல்துறை மற்றும் ஆர்டிஓ விசாரணை எதுவும் நடத்தப்படாமலும் உடற்கூறு ஆய்வு செய்யாமலும் இருப்பதால் தீபிகாவின் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் தீபிகாவின் கணவர் சுரேஷ் குமாரை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.இளம் பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


