

குச்சிபாளையம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் இடிந்து விழும் மேற்கூரைகள் காரணமாக உயிர் பயத்துடன் வாழும் பொதுமக்கள், சீரமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மல்லியம் ஊராட்சிக்கு உட்பட்ட குச்சிபாளையம் கிராமத்தில் காலனி தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தொகுப்பு வீடுகள் அனைத்தும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. தற்பொழுது இந்த வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து, காரைகள் ஏதும் இன்றி இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. சில வீடுகளில் மேற்கூரைகளை அகற்றிவிட்டு பொதுமக்கள் தாங்களாகவே இரும்பு தகரத்தை மேற்கூரைகளாக மாற்றி வசித்து வருகின்றனர்.

மேற்கூரைகள் அகற்றப்படாத வீடுகளில் காரைகள் பெயர்ந்து மேலே விழுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சிறு குழந்தைகள் உடன் வசிக்கும் பெற்றோர்கள் இரவு நேரங்களில் வீட்டின் உள்ளே படுப்பதை விடுத்து பாதுகாப்பிற்காக வெளியில் வந்து உறங்குகின்றனர். பனி மழை இவற்றால் தாங்கள் பாதிக்கப்படுவதுடன் எப்பொழுது கூரை இடிந்து விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற நிலையில் வசிப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். உடனடியாக தங்கள் வீடுகளை புதிதாக கட்டித் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

