• Fri. Apr 26th, 2024

தி.மு.க ஆட்சியில் மீண்டும் தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டாகிறதா?

Byவிஷா

Nov 30, 2021

தமிழ்நாடு அரசு வழங்கும் உரிமைத் தொகுப்பில் பொங்கல் வாழ்த்துகளுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும் அச்சிட்டு வாழ்த்தியுள்ளது மீண்டும் விவாதத்தையும், மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டாகிறதா? என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளது.


தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று ஒரு தரப்பும், சித்திரை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று மற்றொரு தரப்பும் இன்றளவும் வாதிட்டு வருகின்றனர். ஒரு இனத்துக்கான அடையாள சிக்கல் என்பதால், நூற்றாண்டுகளாகத் இப்பிரச்சினை தொடர்கிறது.


1969ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது பொங்கலுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று அறிவித்து அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். அதன்பின்னர் 1971ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறையை தமிழக அரசு ஏற்கும் என அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தினார். இது தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், தமிழ்நாடு அரசு இதழிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.


இதனைத்தொடர்ந்து 1989ஆம் ஆண்டு மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கவிருப்பதாக பேசத் தொடங்கினார். அதன்பின்னர், 2008 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஜனவரி 29ஆம் தேதி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில், சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று அறிவித்தார்.


இந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், சித்திரை 1ஆம் தேதியான ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என குறிப்பிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கலைஞர் தொட்டு திமுகவினர் தொடர்ந்து தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். 10 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, தொடர்ந்து மாநில உரிமைகளையும், திராவிட சித்தாந்தங்களையும் தூக்கி பிடித்து வருகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் ஸ்டாலின் அதனை முன்னிறுத்தி வருகிறார். இந்நிலையில், மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தை 1 தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பு வெளியாகும் எண்கிற தகவலை அந்த தொகுப்பு பை அறிவுறுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *