• Thu. May 9th, 2024

வீர மரணமடைந்த தமிழக ராணுவ போர்வீரர்களின் வாரிசுகளுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்-முதல்வர் வழங்கல்

Byகாயத்ரி

Nov 30, 2021

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்து, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த படைவீரர் கே. ஏகாம்பரம் அவர்களுடைய மனைவி. இ. குமாரி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் கே. கருப்பசாமி அவர்களுடைய மனைவி ஆர். தமயந்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் பி.பழனிகுமார் அவர்களுடைய மனைவி ஜி. பாண்டியம்மாள் ஆகியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும், லடாக் – காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை (ஜோஷிமத், உத்ரகாண்ட் மாநிலம்) பனிச்சறுக்கு மூலம் இந்திய இராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற முதல் தமிழ்நாட்டு இராணுவ வீரரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன். எஸ். குபேர காந்திராஜ் அவர்களின் சாதனையை கௌரவித்து மாண்புமிகு முதலமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., பொதுத்துறை சிறப்புச் செயலாளர் திருமதி வி. கலையரசி, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *