• Sat. Apr 20th, 2024

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆகிறாரா இளையராஜா?

இசைஞானி இளையராஜாவின் கருத்து குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் வரிசை கட்டும் வேளையில், குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் தேர்விலும் இளையராஜாவின் பெயர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதன் முழு பின்னணி குறித்து இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்!

வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதிக்குள் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டிய நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த ஆலோசனைகளை பா.ஜ.க உயர்மட்ட அளவில் நடத்தி வருகிறது. வேட்பாளர் தேர்வில் பட்டியலின, பழங்குடியினம் பெண்கள் ஆகிய பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்திற்கு முன்னுரிமை அளித்து பரிசீலிக்கப்படுவதாகவும் தெரிகிறது. அந்த வகையில் இளையராஜா, இஸ்ரோ சிவன், தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள். அந்த வகையில், 2017 ஆம் ஆண்டு தேர்தலில் 65.5 விழுக்காடு வாக்கு பலத்துடன் இருந்த பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தற்போது 48.8 விழுக்காடு வாக்குகளே உள்ளன. இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால், கடும் போட்டி ஏற்படும். அதனால் தான் ‘நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்வது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. ஆட்டம் இன்னும் முடியவில்லை” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கலாம் என்ற கருத்துக்களும் உலவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்திலிருந்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்கிற அஸ்திரத்தை எடுத்தால், தி.மு.க.விற்கு அது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க.தலைமை கருதலாம்.

மேலும் தென்னகத்திலும் குறிப்பாகத் தமிழகத்தில் வலுவாகக் காலூன்ற இது உதவும் என்ற நம்பிக்கையும் பாரதிய ஜனதா கட்சிக்கு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே முடிந்த வரை குடியரசுத் தலைவர் வேட்பாளரை தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுப்பது, அது கைகூடாமல் போகும் நிலையில், துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரையாவது தமிழகத்திலிருந்து முன்னிறுத்துவதில் பா.ஜ.க. தலைமை முனைப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *