• Sat. Apr 20th, 2024

அதிமுகவினர் 150 பேரை இழுக்க திமுக தீவிர முயற்சி?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை அதிமுக தலைமை இன்னும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்காத நிலையில், 150-க்கும் மேற்பட்டவர்களை இழுக்க திமுக முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. எதிர்க்கட்சியான அதிமுக ஒரு மாநகராட்சியைக்கூட கைப்பற்ற முடியாமல் தோல்வியை சந்தித்தது. மாநகராட்சியில் 164, நகராட்சியில் 638, பேரூராட்சியில் 1,206 என மொத்தம் 2,008 வார்டுகளை அதிமுக கைப்பற்றி, 2-வதுஇடத்தில் உள்ளது. ஆனாலும், வெற்றி பெற்றவர்களை அதிமுகதலைமை இன்னும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடக்க உள்ள நிலையில், அதிமுகவினரை இழுக்க திமுக முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்கள் சிலர் கூறியதாவது:
தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் அனைவரையும் சென்னை அறிவாயலத்துக்கு வரவழைத்து, கட்சித் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக அவர் நின்றுகொண்டே அனைவரையும் சந்தித்ததாக செய்திகள் வருகின்றன. அதேபோல, பாஜக, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும் தலைமையை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர்.

கடும் போட்டிகள், இடையூறுகளை கடந்துதான் நாங்களும் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், எங்கள் வெற்றியை தலைமை அங்கீகரித்து பாராட்டாதது வருத்தமாக உள்ளது. தவிர, நகராட்சி தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் இருந்தாலும், மறைமுக தேர்தலில் பிரச்சினை வந்துவிடக் கூடாது எனகருதுகிறது. அதனால், அதிமுகவினரை தங்கள் பக்கம் இழுக்கமுயற்சிக்கிறது. ஏற்கெனவே, 5 பேர்திமுகவுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில், தேனி, தென்காசி, சேலம், கோவை, சிவகங்கை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருநெல்வேலி உள்ளிட்டமாவட்டங்களில் அதிமுக கணிசமாக வெற்றி பெற்றுள்ளது. இங்கு உள்ள நகராட்சி, பேரூராட்சிகளின் வார்டுகளில் வெற்றி பெற்ற 150-க்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்களை இழுக்க திமுக பல்வேறு கட்டங்களில் முயற்சி செய்கிறது. இந்த சமயத்தில் தலைமையை சந்தித்தால் எங்களுக்கு உற்சாகம் கிடைக்கும். எனவே, தலைமை உடனே எங்களை சந்திக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *