சின்னமனூர் 13 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆகிய கலைச்செல்வி, அதே வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு திமுகவின் இளைஞர் அணியைச் சேர்ந்த நபரே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி சின்னமனூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி 27 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக 17 இடங்களிலும் அதிமுக ஆறு இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
இதில் சின்னமனூர் நகராட்சியில் 13 வது வார்டில் அதிமுக வேட்பாளர் 260 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 13 வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்ட கலைச்செல்வி என்ற வேட்பாளர் , வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் 30 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோல்வி குறித்த காரணங்களை ஆய்வு செய்த திமுக வேட்பாளரான கலைச்செல்வி, அவர் தோல்வி அடைவதற்கு திமுகவின் இளைஞர் அணியைச் சேர்ந்த நபர்தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். திமுக வேட்பாளரை தோற்கடிப்பதற்கு 13 வது வார்டில் சுயேச்சை வேட்பாளரை நிறுத்தி, திமுகவின் இளைஞர் அணியைச் சேர்ந்த பஞ்சாப் குமார் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி உள்ளார் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார், சின்னமனூர் 13வது வார்டு திமுக வேட்பாளர் கலைச்செல்வி.
சின்னமனூர் நகராட்சி பகுதியில் திமுகவில் பிரபலமான பஞ்சாப் குமார் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதால் மக்களின் ஓட்டு சுயேட்சை வேட்பாளருக்கு சென்றதாகவும் , நடந்து முடிந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் 165 வாக்குகள் பெற்று உள்ளார் எனவும் கூறியுள்ளார்.
13 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட மாலதி பெரிய அரசியல் பின்புறம் இல்லாதவராகவும் அரசியல் பற்றிய முழுமையான புரிதல் இல்லாதவராகவும் உள்ளவர். இவருக்கு திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த பஞ்சாப் குமார் முழு உறுதுணையாக இருந்துள்ளார்.
மாலதி பெற்ற 165 வாக்குகளும் திமுகவிற்கு கிடைக்கவேண்டிய வாக்குகள் எனவும் திமுகவின் வாக்குகள் பிரிந்ததால் அதிமுக வேட்பாளர் 30 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் எனவும் கூறியுள்ளார்
இதனால் திமுகவின் வாக்கை பிரித்து, அதிமுக வேட்பாளர் வெற்றி பெறச் செய்த திமுகவின் இளைஞர் அணி சேர்ந்த நபர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் ஆகிய ராமகிருஷ்ணனிடம் மனு அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக வேட்பாளர் கலைச்செல்வி கூறுகையில், ” பஞ்சாப் குமார் தனது அம்மாவை நகர்மன்ற தலைவர் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் . இதனால் அவருக்கு கவுன்சிலரின் ஆதரவு தேவைப்படுவதால் தனக்கு விருப்பமான நபர்களை தேர்தலில் வெற்றி பெற பல்வேறு பணிகளைச் செய்கிறார்.
திமுகவைச் சேர்ந்த இவர் திமுக வெற்றி பெற எந்த களப்பணியும் செய்யாமல், அதிமுக வெற்றி பெறுவதற்கு பல்வேறு வேலைகளையும் செய்தார். இதனால், இவர் மீது கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சின்னமனூர் பகுதியில் தி மு க விற்கு உள்ளே ஏற்பட்ட உட்கட்சிப் பூசல், அப்பகுதி திமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
