• Thu. Apr 25th, 2024

மீண்டும் ஊரடங்கு தேவையா?- அமைச்சரின் விளக்கம்

ByA.Tamilselvan

Jul 6, 2022

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு தேவையா என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்றது.
இதில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “கொரோனா காலகட்டத்தில், இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோது, பொருளாதாரத்தைக் காப்பாற்றி வளர்ச்சியைக் காட்டியது தமிழகம் மட்டும்தான்.இலங்கைக்கு எப்படி தமிழக தொழில் துறை உதவியதோ, அதேபோல் கொரோனா தடுப்பூசி போட சி.எஸ்.ஆர் நிதி மூலம் தொழில் நிறுவனங்கள் உதவ வேண்டும்.மேலும், கொரோனா தினசரி பரிசோதனைகளில் 10 சதவீதத்திற்கும் மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலோ, அல்லது 40 சதவீதத்திற்கும் மேல் மருத்துவ சிகிச்சையில் இருந்தாலோ மட்டுமே ஊரடங்கு என்பது அவசியமாகும்.தமிழகத்தில் நேற்று வரை 2,662 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் இருந்தாலும் கூட, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது.
எனவே, தற்போதைய நிலையில் ஊரடங்குக்கு அவசியம் இல்லை. ஊரடங்கு பிறப்பிக்க அவசியம் ஏற்படாத வகையில் பொதுமக்களும் அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *