• Sat. Apr 20th, 2024

தமிழகத்தில் கந்து வட்டி வேட்டை தீவிரம்

ByA.Tamilselvan

Jun 10, 2022
  பழைய கந்துவட்டி வழக்குகளை தூசுதட்டி நடவடிக்கைகளை தமிழகபோலீசார் துவங்கியுள்ளனர். எனவே தமிழக்தில் கந்துவட்டி வேட்டை தீவிரமடைந்துள்ளது.

கடலூர் மாவட்டம் மதுவானமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவர் கடலூர் பெரிய நெல்லிக்கொல்லை பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்த பணத்துக்கு கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததால் காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து கந்து வட்டி கேட்டு மிரட்டிய அனிதா கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தமிழகம் முழுவதும் கந்து வட்டியை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்டோருக்கு அவர் சுற்றறிக்கையை அனுப்பி
அதில் கந்து வட்டி கும்பலை ஒழித்துக்கட்ட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். டி.ஜி.பி.யின் உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கந்து வட்டி வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்து வட்டி புகார்களை தூசு தட்டி எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுபோன்ற புகார்களில் உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் கந்து வட்டிக் கேட்டு மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது
தங்களது பகுதியில் கந்து வட்டிக்கு விடும் நபர்கள் யார்-யார்? என்பதையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கந்துவட்டி பிரச்சினையால் யாரும் தற்கொலை செய்து கொண்டால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குட்பட்ட போலீஸ் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் மற்றும் டி.எஸ்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் கந்து வட்டி கும்பலை ஒழித்துக்கட்ட போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் சென்னை மாநகர் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் கந்து வட்டி தொடர்பாக பழைய வழக்குகள் இருந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார். சென்னையில் அனைத்து சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர்களும் கந்துவட்டி தொடர்பான புகார்களை கண்காணித்து அதன் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கந்து வட்டி புகார்கள் அளிக்கப்பட்டு அதில் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உதவி கமிஷனர்களே பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர்கள் கந்து வட்டி விவகாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *