• Sat. Apr 20th, 2024

மதுரை மாநகராட்சியின் 9-வது மேயராக இந்திராணி பதவியேற்பு!

Byகுமார்

Mar 4, 2022

மதுரை 1971-ம் ஆண்டு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. அப்போது நகர சபை தலைவராக இருந்த மதுரை முத்து முதல் மேயரானார். அதன் பிறகு 1978ம் ஆண்டில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சி பதவி காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. 2 ஆண்டுக்கு ஒருவர் வீதம் 3 மேயர்கள், 3 துணை மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் படி 1978 -ம் ஆண்டில் முத்து, 1980 -ம் ஆண்டில் கிருஷ்ணன், 1982 -ம் ஆண்டில் பட்டுராஜன் மேயராக இருந்தனர்.

இதன் பிறகு மேயர் பதவி காலம் 5 ஆண்டுகள் ஆக்கப்பட்டு 1999-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடந்தது. மேயரை மக்கள் நேரடியாக தேர்வு செய்தனர். அதில் 2001 -ம் ஆண்டில் குழந்தைவேலு, 2006 -ம் ஆண்டில் மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்தனர். இதில் தேன்மொழி மேயரானார். அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு ராஜன் செல்லப்பா மேயராக இருந்தார். தற்போது மதுரை மாநகராட்சியின் 9-வது மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி பதவியேற்றார்.

மதுரை மாநகராட்சி மாமன்றத்தில் உள்ள பெரியார் கூட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு ஆணையர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பகல் 12 மணியளவில் இந்திராணி உறுதிமொழியேற்றார். பின்னர், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்து, மேயருக்கான வெள்ளிச் செங்கோலை ஆணையர் வழங்கினார்.

முன்னதாக, மேயர் அணியும் கருப்பு அங்கியும், தங்கச் சங்கிலியும் அணிந்து வருகை தந்த இந்திராணிக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர். இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் .பூமிநாதன், துணை ஆணையாளர் .சங்கீதா, மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலி தளபதி, மகேஸ்வரன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலை செல்வம், மாமன்ற செயலாளர் (பொ) .பாலசுப்பிரமணியன், உதவி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *