டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆழ்துளை கிணறு போர்வெல் சங்கத்தின் சார்பில் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தம் குறித்து மதுரை மாவட்ட தலைவர் மோகன் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆழ்துளைக் கிணறு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து வருகிறோம். இந்த வேலைநிறுத்தம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக மூன்று நாட்கள் மட்டும் நடைபெறுகிறது.
தற்போது அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் டோல்கேட் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை குறைக்க வேண்டும். மேலும் ஆழ்துளை கிணறு போடும் வாகன வைத்திருக்கும் அனைவருக்கும் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். இந்தத் தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் அவர்களது குடும்பம் இருக்கிறது. எனவே அரசு இதைக் கருத்தில் கொண்டு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாது டோல்கேட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படவில்லை என்று அகில இந்திய அளவில் மாபெரும் போராட்டம் நடத்த சம்மேளன முடிவு செய்துள்ளது’ என தெரிவித்தார்.