மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், ராஜா முத்தையா மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் தமிழக மக்களை பிளவுபடுத்தக்கூடிய வகையிலும், மக்களுக்கு மத்தியில் மோதலை ஏற்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதைப் பிரதிநிதிகள் விவாதத்தில் முன் வைத்தனர். இவற்றை, எதிர்கொள்ளக் கூடிய வகையில், இவர்களுக்கு எதிராக மக்களில் ஒற்றுமையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துவதென்று இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மைக்கேல்பட்டி விவகாரத்தை எப்படி தேசிய அளவிலான பிரச்சனையாக மாற்றினார்களோ அது போல, சிறு துரும்பு கிடைத்தாலும் அதனை பெரும் பிரச்சனையாக ஊதிப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் கூடுதலாகத் தொழிற்சாலைகளை நிறுவி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இவற்றின் நிலை என்ன, அதன் மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பது போன்ற விவரங்கள் வெளிவராத ரகசியமாகவே உள்ளது. எனவே, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் வெள்ளை அறிக்கையை தமிழக அரசாங்கம் வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கிளை வேண்டும் என்பது தென் மாநிலங்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளது. அதனை, சென்னையில் அமைக்க வேண்டும் என்பதை வற்புறுத்துகிறோம். மேலும் கல்வி நிறுவனங்களை மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதை எதிர்க்கிறோம். தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆர்எஸ்எஸ் சாகாக்கள் நடத்துவதற்குத் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்” என்றார்.