• Thu. Apr 25th, 2024

மருத்துவ காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை… அரசின் முடிவு என்ன..?

Byகாயத்ரி

Apr 2, 2022

தமிழக முழுவதும் பொதுமக்களுக்காக பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களுக்கு அதிக நலத்திட்டங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் முன்களபணியாளர்களாக அரசு ஊழியர்கள் செயல்பட்டனர். இந்த நிலையில் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வாயிலாக அரசு ஊழியர்கள் மருத்துவ சிகிச்சை பார்த்துக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசானது ஆசிரியர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் அவரவா் ஊதியத்தில் ரூபாய் 300 பிடித்தம் செய்து வருகிறது .

இந்த நிலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு காப்பீடு நிறுவனங்கள், மருத்துவச் சிகிச்சைக்கு பேக்கேஜ் முறையில் பணம் வழங்குவதை தடுத்து நிறுத்தி, அரசு ஆணைப்படி கட்டணம் இல்லா மருத்துவச் சிகிச்சை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த கூட்டணியில் சிவகங்கை மாவட்ட அமைப்பின் சாா்பாக, மாநிலத் துணைதலைவா் ஆரோக்கியராஜ், மாவட்டத் தலைவா் தாமஸ் அமலநாதன், மாவட்ட செயலா் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி போன்றோர் கூட்டாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

கடந்த 2021ஐ செயல்படுத்த ஒப்பந்தம் செய்து இருக்கிற யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 01/09/2021 முதல் எம்.டி. இந்தியா மற்றும் மெடி அசிஸ்ட் என்ற தனியாா் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் 3ம் நபா் ஒப்பந்தம் செய்து, இந்த திட்டத்தை செயல்படுத்த பொறுப்பு வழங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது அதற்கான முழுகட்டணத்தையும் வழங்குவதில்லை. அதற்கு பதில் காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான மொத்தத் தொகையில் 25 % -50 % வரை மட்டுமே வழங்குவது என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆகவே தமிழ்நாடு அரசின் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கட்டணம் இல்லா சிகிச்சை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *