

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் பூர்ணம் குமார் ஷா, பாகிஸ்தான் வீரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர், இன்று அட்டாரி எல்லை வழியாக இந்தியாவிற்கு திரும்பினார்.

பிஎஸ்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வீரர் பூர்ணம் குமார் ஷா விவசாயிகளை கண்காணித்துக் கொண்டிருந்தபோது எல்லைக்கும் ஜீரோ லைனுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்துள்ளார். கடுமையான வெப்பம் காரணமாக மரத்தடியில் நிழல் தேடியபோது, சர்வதேச எல்லையை தாண்டியதாக கூறி பாகிஸ்தான் வீரர்கள் அவரை கைது செய்தனர்.
மேற்கு வங்காளத்தின் ஹூக்ளியைச் சேர்ந்த இவர், பிஎஸ்எஃப்-ன் 182வது பட்டாலியனைச் சேர்ந்தவர். விடுமுறை முடிந்து மூன்று வாரங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்திருந்தார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவிய பதற்றமான சூழ்நிலையில் வீரரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
இருப்பினும், அனைத்து சட்ட நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு, அமைதியான முறையில் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிஎஸ்எஃப் தெரிவித்துள்ளது.

