• Sun. Mar 16th, 2025

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி – இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்தியா

ByP.Kavitha Kumar

Mar 5, 2025

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் நுழைந்தது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. இதில் 44ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தலான வெற்றி பெற்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய அரையிறுதி போட்டி துபாயில் உள்ள இண்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் விளையாட ஆரம்பித்தபோதே முதல் ஓவரில் முகமது ஷமியின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து கூப்பர் டக் அவுட் ஆனார். ஹெட் 39 ரன்களிலும், கேப்டன் ஸ்மித் 73 ரன்களிலும், கேரி 61 ரன்களிலும் வெளியேறினர். இவர்களை அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா அணி 264 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்களையும் , ஜடேஜா மற்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து 265ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. 43 ரன்களுக்குள் கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் அவுட்டானார்கள். இதனைத் தொடர்ந்து விராட் கோலி, ஸ்ரேயஷ் ஐயர் ஜோடி பொறுமையாக விளையாது. ஸ்ரேயஷ் ஐயர் 45ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல் 27ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் கே.எல்.ராகுலுடன் கோலி இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இந்த ஜோடி ரன் ரேட்டை அதிகரித்த போது விராட் கோலி 84ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடியவர், திடீரென சிக்சர்களாக பறக்கவிட்டார். வெற்றிக்கு 6 ரன்கள் இருக்கும் போது அவர் ஆட்டமிருந்தார். கே.எல்.ராகுலுட கைகோர்த்த ஜடேஜா கூட்டணி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இதனைத்தொடர்ந்து இந்திய அணி 4விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸாம்பா,எல்லீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தானில் லாகூர் கடாஃபி விளையாட்டரங்கில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும்.