• Sat. Mar 22nd, 2025

இந்தியா அதிரடி வெற்றி எதிரொலி – ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு

ByP.Kavitha Kumar

Mar 5, 2025

இந்திய அணிக்கு எதிராக தோல்வியைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இருந்து . ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்.

துபாயில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் ஓய்வை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக ஆஸி கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்திய அணியுடனான போட்டிக்கு பின் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித்தும் ஒருவர். 2010-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகமான அவர் இதுவரை 170 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5800 ரன்கள், 12 சதம், 35 அரைசதம் மற்றும் 28 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், ” இது ஒரு சிறந்த பயணமாக இருந்தது. விளையாட்டின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். பல அற்புதமான நேரங்களும் அற்புதமான நினைவுகளும் உள்ளன. இரண்டு உலகக் கோப்பைகளை வென்றது ஒரு சிறந்த நினைவுகளாகும். அதில் எனது பயணத்தைப் பகிர்ந்து கொண்ட பல அற்புதமான அணி வீரர்களும் இருந்தனர்.

2027 உலகக் கோப்பைக்குத் தயாராகத் தொடங்க மற்ற வீரர்களுக்கு இப்போது ஒரு சிறந்த வாய்ப்பு. எனவே அதற்கு வழி வகுத்துக் கொள்ள இதுவே சரியான நேரமாக உணர்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு முன்னுரிமையாக உள்ளது. மேலும் அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அதற்கு பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நான் மிகவும் எதிர்நோக்குகிறேன். அந்த போட்டிகளில் நான் இன்னும் நிறைய பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்றார்.