
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை இந்தியா அணி தட்டிச் சென்றதுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று இரவு நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்ததது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர். இதில் வில் யங் 15 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக கேன் வில்லியம்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அவரைத் தொடர்ந்து ரச்சின் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அவருக்கடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் நிதானமாக விளையாடி 63 ரன்களைக் குவித்தார். இதனிடையே டாம் லதாம் 14 ரன்களில் அவுட்டானர். இதையடுத்து வந்த மைக்கேல் பிரெஸ்வெல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் வருண் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் ஷுப்மன் கில் இணைந்து பேட்டிங் செய்தனர். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்தது இந்தியா. ரோஹித் அதிரடியாக ஆடி அசத்தினார். நியூஸிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் வீசிய 19-வது ஓவரில் கவர் திசையில் ஷாட் ஆட முயன்றார் கில். ஆனால், கிளென் பிலிப்ஸ் அதை அபாரமாக கேட்ச் பிடித்தார் இதனால் கில், 50 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிரேஸ்வெல் வீசிய அடுத்த ஓவரில் கோலி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் இணைந்து நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால்,, ஸ்ரேயாஸ் 48 ரன்களும், அக்சர் 29 ரன்களும் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 18 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி 34 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இவருடன் இணைந்த ஜடேஜா பவுண்டரி அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். நியூஸிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதனை படைத்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மழை காரணமாக நிறுத்தப்பட்டு, இரு அணிகளுக்கும் கோப்பை பகிரப்பட்டது. அதன் பின்பு தோனி தலைமையில் இந்திய அணி 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இதையடுத்து தற்போது ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தான் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா சாதனை
இந்த போட்டியின் மூலம் ரோஹித் சர்மா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி சாதனையை முறியடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் அடித்த எட்டாவது ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்கோர் இது. இந்த இன்னிங்ஸ் மூலம் எம்.எஸ்.தோனி சாதனையை முறியடித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நியூசிலாந்துக்கு எதிராக 7 முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
