

செங்கம் அரசு பள்ளியில் மாணவர்கள் ராகிங் செய்து சக மாணவர்களை தாக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை சுமார் 1200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நகர்ப்புறம், கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் சீருடை, தலைமுடி அலங்காரம் உள்ளிட்டவற்றில் விதிமுறைக்கு மாறாக நடந்து வருவதாகவும், சுய ஒழுக்கம், கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது கிடையாது, பள்ளி வேளையிலே சாலைகளில் சுற்றி திரிவது பைக்கில் 3 அல்லது 4 பேராக ஏறி சாகசம் செய்வது போன்றவை தொடர்ந்து செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த பள்ளி அருகில் பெண்கள் அரசு மேல்நிலை பள்ளியும் உள்ளது இதனால் மாணவர்கள் பள்ளிக்கு அருகில் சென்று மாணவிகளை கேலி செய்வதும், பைக்கிலோ, சைக்கிளிலோ வேகமாக சென்று மாணவிகள் மீது மோதுவதுபோல் அட்டகாசம் செய்யும் சம்பவங்களும் தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று வகுப்பறையில் மாணவர்களின் ராகிங் செய்வது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சில மாணவர்கள் பெஞ்சில் அமர்ந்து கொண்டு மற்ற மாணவர்களை புத்தகம், அட்டை மூலம் காற்றுக்காக வீச செய்வதும், அதில் சரியாக வீசாத மாணவனை ஒரு மாணவன் அடிப்பதும், மேஜை, நாற்காலிகளை உடைப்பதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் வகுப்பறையில் ஆசிரியரை மாணவர்கள் தாக்க முயன்றதும், வேலூர் தொரப்பாடி பள்ளியில் மேசை, நாற்காலி, பெஞ்சுகளை மாணவர்கள் உடைப்பதும், திருவாரூர் பள்ளியில் வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்தும்போது மாணவர்கள் டான்ஸ் ஆடுவதும் போன்ற அநாகரீக செயல்கள் அரங்கேறி வரும் நிலையில் செங்கத்தில் இதுபோன்ற சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இனி இவ்வாறு நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.