தென்மேற்குபருவமழை காரணமாக ஊட்டியில் தொடந்து மழை பெய்து வருகிறது. நேற்றுமட்டும் 6 மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்தது. இந்தநிலையில் ஊட்டியில் நேற்று மழை மீண்டும் வெளுத்து வாங்கியது. காலை 11 மணி முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 12 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை மாலை 6 மணி வரை மழை நீடித்தது. பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, படகு இல்லம், மத்திய பஸ் நிலையம், சேரிங் கிராஸ், ஊட்டி மார்க்கெட் பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. மழையால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழையால் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, ஊட்டியில் 20 மி.மீ., மழை பதிவானது. இதேபோல கூடலூர் பகுதியிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கனமழையால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.