• Thu. Mar 28th, 2024

வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில்
வெள்ளப்பாதிப்பில் தப்பிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி

ByA.Tamilselvan

Nov 3, 2022

வடகிழக்கு பருவமழையையொட்டி வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் தப்பிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் தீயணைப்புத் துறையினர் நடத்தி காண்பித்தனர்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்ட நிலையில், திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் நேற்று தீயணைப்புத் துறையினர் சார்பில் வெள்ளத்தடுப்பு ஒத்திகை நடந்தது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை திருவள்ளூர் மாவட்ட அலுவலர் பாஸ்கரன், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வில்சன் ராஜ்குமார், நிலை அலுவலர் இளங்கோவன், மண்டல துணை தாசில்தார் செல்வி அருணா, திருவள்ளூர் வருவாய் ஆய்வாளர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர் பாரதி மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் தங்களை எவ்வாறு வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு பாதுகாப்பான முறையில் தப்பிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கமாக எடுத்து கூறினார்கள். அதைத்தொடர்ந்து தீயணைப்பு துறை அதிகாரிகள் வீட்டில் கிடைக்கக்கூடிய தெர்மாகோல், டிரம், டியூப்புகள், லைப் ஜாக்கெட், ரப்பர் போர்ட், குடிநீர் பாட்டில்கள், கயிறு, காலி குடங்கள் போன்ற பொருட்களைக் கொண்டு எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கில் சிக்கினால் எவ்வாறு அதை பயன்படுத்தி நீரில் இருந்து வெளியே வருவது என்பது குறித்து கோவில் குளத்தில் தத்ரூபமாக செய்து காண்பித்தனர். இதனை திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்து பயன்பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *