• Fri. Mar 29th, 2024

கொடநாடு வழக்கில் அதிரடி திருப்பம்.. அவகாசம் கேட்கும் அரசு தரப்பு!

கொடநாடு வழக்கில், அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த 27ம் தேதி சயான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானதை தொடர்ந்து, விசாரணையின் போது, புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கொடநாடு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, கொடநாடு வழக்கு இன்று மீண்டு உதகை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, சயான், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த விசாரணை முடிந்து, செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்ததாக தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த விசாரணையின் போது, புலன் விசாரணை நடைபெறுவதால் அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்படியிருந்தது. அதன்படி புலன் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.

அந்த விசாரணையில் புலன் விசாரணையை தொடரலாம் என்றும் காவல்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார். அதன்படி, மேல் புலன் விசாரணை தொடங்கி உள்ளது. அதனால் இன்று நடைபெற்ற விசாரணையில், புலன் விசாரணை நடத்த கால அவகாசம் வேண்டும் என நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது என கூறினார்.

சம்பவ நடந்த நாளன்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், விசாரணை அதிகாரிக்கு சம்பவம் குறித்து தெரிவதற்கு முன் தடயவியல் நிபுணர் சம்பவ இடத்திற்கு சென்றது முரணானது எனவும் தெரிவித்தார். கொடநாடு வழக்கில் பல விஷயங்கள் மர்மமாக உள்ளதால், முழுமையான புலன் விசாரணை செய்யவேண்டி உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *