கடும் குளிர் காரணமாக லக்னோவில் பள்ளிகள் 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக லக்னோவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் வருகிற ஜனவரி 10-ம் தேதி வரை இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் அடிப்படைக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு நேற்று அனுப்பப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவில் மாணவர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீதாபூரில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் 4ம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். வாட்ஸ் அப் மூலம் மாணவர்களின் பெற்றோருக்கு இந்த தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கோரக்பூரில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.