நற்றிணைப் பாடல் 37:
பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை,
உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தௌ மணி
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று
இவளொடும் செலினோ நன்றே; குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ,
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம்
ஆகுவது அன்று, இவள் அவலம்- நாகத்து
அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு,
ஆர்கலி நல் ஏறு திரிதரும்
கார் செய் மாலை வரூஉம் போழ்தே.
பாடியவர் பேரி சாத்தனார்
திணை பாலை
பொருள்:
நீ செல்லும் அத்தம் (வழி) – அகன்ற வெளியில் நெருங்கிய பழம்புதர்கள் வாடிக் கிடக்கும். அங்கே காய்ந்து கிடக்கும் புல்லை மேயும் பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியானது மெல்ல மெல்ல இசை எழுப்பிக்கொண்டிருக்கும்.. இவள் – கூர்மையான (அரிசிப்)பல் கொண்டவள்.
கார்காலத்தில் இடி இடிக்கும் அதிர்வில் படமெடுத்த பாம்பு நடுங்கும். அப்படிப் பாம்பு நடுங்க இடி முழங்கும் கார்காலத்து மாலை பொழுதில் நீ செல்கிறாய். இவளையும் உன் ஊருக்குக் கூட்டிச் செல். கலைமான் விட்டுச்சென்ற பிணைமான் போல, நீ அன்பில்லாதவராக இவளை விட்டுவிட்டுச் சென்றால், கார்காலத்து மாலைப் பொழுதில், குவளைமலர் போன்ற இவள் கண்கள் அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை என்கிறாள் தோழி.