நற்றிணை: 006
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, ‘இவர் யார்?’ என்குவள் அல்லள்; முனாஅது,
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
இரும் பல் ஒலிவரும் கூந்தல் பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.
பாடல் – குறிஞ்சி பாடியவர் – பரணர்.
பொருளுரை:
நீரில் வளர்ந்த ஆம்பலின் உள்ளிற் புழையுடைய திரண்ட தண்டை நாருரித்தாற் போன்ற; அழகு குறைந்த மாமையையும்; குவளை போன்ற அழகு தங்கப்பெற்ற குளிர்ச்சியுடைய கண்ணையும்; திதலையுடைய அல்குலையும் பெரிய தோளையும் உடைய இளமகளாகிய நம்மாற் காதலிக்கப்பட்ட தலைவியிடத்து; நெருங்கச் சென்று எமது வருகையை முன்னாடிக் கூறுவாரைப் பெறின்; அவரை நோக்கி இவர் யாவரென்று கேட்பாளல்லள்; சுரத்திலுள்ள குமிழ மரத்தின் வளைந்த மூக்கினையுடைய முற்றிய கனிகள் கீழே உதிர்ந்து ஆங்குக் குதித்து விளையாட்டயர்கின்ற இள மானுக்கு வெறுப்பில்லாது உணவாகாநிற்கும்; வலிய வில்லையுடைய ஓரி என்பவனது கானம்போல நறுநாற்றமுடையவாகி; கரிய பலவாகித் தாழ்ந்த கூந்தலையுடைய அவள்தான்; யாம் வந்திருக்கின்றேம் என்பதைக் கேட்டவுடன்; களிப்பினாலே பெரிதும் மயக்கமெய்தா நிற்பள்;






