நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
பாடியவர்: தேவகுலத்தார்.
திணை: குறிஞ்சி
பொருள்:
மலைப்பக்கத்தில் உள்ள, கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு, பெருமளவில் வண்டுகள் தேனைச் செய்தற்கு ஏற்ற இடமாகிய நாட்டை உடைய தலைவனோடு எனக்குடைய நட்பு, பூமியைக் காட்டிலும் பெரியது. ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது. கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது.
பாடலின் பின்னணி:
தலைவன்மீது தலைவி மிகுந்த காதல் உடையவளாகவும் அன்புடையவளாகவும் இருக்கிறாள். அவர்களிடையே உள்ள நட்பை அவள் மிகவும் அருமையானதாகக் கருதுகிறாள். ஒருநாள் தலைவன் தலைவியைக் காண வருகிறான். தலைவன் காதில் கேட்கும்படியாக, அவர்களுடைய நட்பின் அருமையைத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.