குறுந்தொகைப் பாடல் 2:
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
பாடியவர்: இறையனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
பூந்தாதை ஆராய்ந்து, தேனை உண்ணுகின்ற வாழ்க்கையையும், அழகிய இறகுகளையும் உடைய வண்டே! நான் கேட்க விரும்பியதைக் கூறாமல், நீ கண்டு அறிந்ததையே சொல்வாயாக! நீ அறியும் மலர்களுள், என்னோடு பழகியதால் நெருங்கிய நட்பையும், மயில் போன்ற சாயலையும், நெருங்கிய பற்களையும் உடைய, இந்த இளம்பெண்ணின் கூந்தலைப் போல, நறுமணமுடைய மலர்களும் உளவோ?
பாடலின் பின்னணி:
ஒரு ஆண்மகன் (தலைவன்) தற்செயலாக ஒரு அழகான பெண்ணைச் சந்திக்கிறான். அவனும் அவளும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் நெருங்கிப் பழகுகிறார்கள். ஒருநாள், அவளோடு இருக்கும்பொழுது, அவள் கூந்தலில் உள்ள நறுமணம் அவனை மிகவும் கவர்கிறது. தன் காதலியின் கூந்தலைப்போல் நறுமணமுள்ள பூக்களும் உளவோ என்று அவனுக்கு ஐயம் எழுகிறது. அவர்கள் இருக்கும் இடத்தில் உள்ள செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு, சில வண்டுகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒரு வண்டைப் பார்த்து, “வண்டே! என் காதலியின் கூந்தலில் உள்ளதைப்போல் நறுமணம் உள்ள பூக்களும் உளவோ?” என்று அவன் கேட்கிறான்.