ஊரக உள்ளாட்சி தேர்தலின் அறிவிப்பு வெளியான உடனே, அ.தி.மு.க. இது ஜனநாயக விரோதப்போக்கான அறிவிப்பாக இருக்கிறது என அதிவித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 2 சட்டமன்றத்தேர்தல்கள், 2 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2 ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடித்திருக்கிறது. ஆனால், 9 மாவட்டங்களுக்கு மட்டுமான ஊரக உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க. அரசு 2 கட்டங்களாக நடத்த முயல்கிறது. இதில் ஏதோ உள் அர்த்தம் இருக்கிறது.
2 கட்டங்களாக தேர்தல் நடந்தால் நியாயமான முறையிலே நடைபெறுவதற்கு உண்டான சாத்தியக்கூறுகள் இல்லை என சொல்லி அ.தி.மு.க. சென்னை ஐகோர்ட்டில் தொடுத்த வழக்கில், தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பாக ஆஜரான தமிழக தலைமை வக்கீல் அ.தி.மு.க. சொன்ன அனைத்து கோரிக்கைகளும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தலை நாங்கள் நடத்துவோம் என்று தமிழக தேர்தல் ஆணையமும் உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால், சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதையே கொள்கையாக கொண்டிருக்கக்கூடிய தி.மு.க. அரசு, தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக இருந்தபோதிலும் அதை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி இந்த தேர்தலில் மிகப்பெரிய வன்முறை களியாட்டங்களை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.
வேட்பு மனு தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் திமுக-வும் தமிழக தேர்தல் ஆணையமும் நடத்தியிருக்கக்கூடிய தேர்தல் விதிமீறல்களையும், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளையும் பட்டியலிட்டால் நாடும் தாங்காது, ஏடும் தாங்காது.
வாக்குப்பதிவு நாளன்று பல இடங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பிலே தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தோம். அதன் மீதும் உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க தவறியிருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டிகள் பாதுகாக்கப்பட்ட அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களிலே பழுதடைந்து இருக்கிறது. இது மிகப்பெரிய சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் நாளன்று காலை முதலே பல்வேறு அராஜக நடவடிக்கைகளை தேர்தல் அலுவலர்கள் ஆங்காங்கே நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆளும் தி.மு.க. அரசிற்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கை பல இடங்களில் குறிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகுதான் தொடங்கி இருக்கிறது.
அ.தி.மு.க. முகவர்கள் பல இடங்களிலே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயகத்தின் 4-வது தூணான பத்திரிகையாளர்களே பல வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
சில இடங்களில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்குவதற்கும் தேர்தல் அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். பல இடங்களிலே வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே அ.தி.மு.க. தாக்கல் செய்த வழக்கில் மீண்டும் இந்த சட்ட விதிமீறல்களையும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தையும் கோர்ட்டில் எடுத்துரைத்து நியாயம் பெற்று இந்த தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி புறவாசல் வழியாக பெற்ற வெற்றி என்பதை கண்டிப்பாக சட்டத்தின் முன், ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்தி காட்டுவோம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.