நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர்.

ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் என்றும் ஒரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.