வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார். பட்டாளம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், மழையால் சேதமடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். கொட்டும் மழையிலும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், சாலைகளில் தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, சேகர் பாபு, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, பரந்தாமன், ஜெ.கருணாநிதி, டாக்டர் எழிலன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் திவால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையைக் குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது!
அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்!” என அவர் தெரிவித்துள்ளார்.