• Sat. Apr 20th, 2024

மளிகைக் கடைக்காரரின் மனிதநேயம்..!

By

Sep 8, 2021

கொரோனா தொற்றால் பலர் வேலையிழந்தும், பொருளாதாரம் இன்றியும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல் கோவில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் ஊர்வலத்திலும் மற்றும் சாரட் வண்டிகளுக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளின் பயன்பாடும் முற்றிலும் தவிர்க்கப்பட்டு உள்ள நிலையில், குதிரை பராமரிப்பதிலும், வாழ்வாதாரம் இன்றியும் அதன் உரிமையாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனை அறிந்த மதுரை செல்லூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் தங்கப்பாண்டியன் என்பவர் நோய் தொற்று காலங்களில் வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்து வந்துள்ளார்.


இந்த நிலையில் நரிமேடு பகுதியில் கோவில் திருவிழாக்கள், விசேஷங்களுக்கு பயன்படுத்தப்படும் வளர்ப்பு குதிரைகள் வைத்திருந்த முத்தையா என்பவர் போதிய வருவாய் இன்றி குதிரைகளைப் பராமரிக்க வழியின்றி குதிரையை விற்றதாக அறிந்ததும், இதேபோன்று வருமானம் இன்றி தவித்து வரும் குதிரைகளை வளர்த்து வரும் உரிமையாளர்களுக்கு குதிரையின் ஒருவாரத்திற்கான தீவனத்தை வழங்க முன்வந்து, தனது மளிகைக் கடைக்கு குதிரையுடன் வருபவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான தீவனத்தை வழங்குவதாக விளம்பரப்படுத்திய சுவரொட்டிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை அறிந்த குதிரை உரிமையாளர்கள் பலரும் இவரது கடைக்கு வந்து குதிரைக்கான தீவனங்களை பெற்றுச் செல்கின்றனர்.


நாளொன்றுக்கு ஒரு குதிரைக்கு தீவனம் உள்ளிட்ட உணவுகள் வாங்க 300 முதல் 500 ரூபாய் வரை செலவாகி வந்துள்ளதாகவும், இதனால் போதிய வருவாய் இன்றி குதிரை வளர்த்த ஒருவர் தன்னுடைய ஒரு குதிரையை விற்ற செய்தியறிந்த தங்கபாண்டியன் இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை தனது கடைக்கு குதிரையுடன் வருபவர்களுக்கு குதிரைக்கு தேவையான தீவனங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து இன்றுமுதல் பத்துக்கும் மேற்பட்ட குதிரை வளர்ப்போர் தங்களது குதிரைகளுடன் வந்து குதிரைக்கு தேவையான தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களை பெற்றுச் சென்றுள்ளனர். போதிய வருவாய் இன்றி தவித்த தங்களுக்கு குதிரையை தொடர்ந்து வளர்ப்பதற்கு தங்கபாண்டியன் போல் பொதுமக்களும் ஏதாவது உதவிகள் செய்ய முன்வரவேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகமும் குதிரை வளர்ப்புக்கு தேவையான தீவனம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க முன்வரவேண்டும் எனவும் குதிரை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாயில்லா ஜீவன்களின் பசி அறிந்து உணவளித்த மளிகைக் கடைக்காரரின் கருணை உள்ளம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மலரட்டும் மனிதநேயம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *