• Thu. Sep 19th, 2024

வீட்டில் ஆடி மாத குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி…???

ByAlaguraja Palanichamy

Jul 20, 2022

ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வம்சம் செழிக்க குலதெய்வ வழிபாட்டை வீட்டிலேயே செய்வது எப்படி ??

ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்லாமல் குல தெய்வத்திற்கும் உகந்த மாதமாக கருதப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தில் திரளான பக்தர்கள் அவரவர்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடுகள் செய்வது மிகவும் விசேஷமாக நடைபெறும் ஒரு செயலாகும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாமல் பலரும் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்தும் வழிபாடு செய்ய முடியாத நிலையில் பக்தர்கள் தற்போது அனுமதிக்கப் படுவதில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் பக்தர்களுக்கான பதிவு தான் இது. ஒவ்வொரு வருடமும் குலதெய்வம் கோவிலுக்கு ஆடி மாதத்தில் சென்று அவரவர்களின் குலதெய்வத்தை வணங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது பாரம்பரியமாக நடக்கும் ஒரு விஷயமாகும்.

அப்போது குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி, மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற சடங்குகளை விமரிசையாக நடத்துவர். உயிர் பலி இடுதலும் அப்போது நிகழ்த்தி, கிடா வெட்டி குலதெய்வத்திற்கு விருப்பமான பொருட்களை எல்லாம் படைத்து குடும்பத்துடன் வம்சம் செழிப்பதற்கு வேண்டுதல் வைத்து வழிபாடுகள் செய்வர். இதற்கென்றே வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கூட நிறைய பேர் படையெடுத்து தங்களின் சொந்த ஊர்களுக்கும், குலதெய்வ கோவில்களுக்கும் செல்ல துவங்குவர்.ஆனால் இப்போது பெரும்பாலானோர் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். அத்தகையவர்கள் எளிமையாக வீட்டிலேயே எப்படி குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது என்பதை பார்ப்போம் வாருங்கள்.

குலம் காக்கும் கடவுளான குலதெய்வத்தை வருடம் தவறாமல் வழிபாடு செய்து வந்தவர்கள் இப்போது மன சங்கடம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் மிகவும் முக்கியமான கடவுளாக தமிழர் பண்பாட்டில் கருதப்பட்டு வருகிறது.எந்த தெய்வத்தை வணங்கும் முன்னரும் குலதெய்வத்தை வணங்கிவிட்டு தான் வணங்குவர். நம் உயிரைப் பறிப்பதற்கு எமன் நம்மை நெருங்கும் பொழுதும், நம் குலதெய்வ அனுமதி பெற்று தான் உயிரைப் பறிப்பதாக புராணங்கள் கூறுகின்றது. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளாதவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நிறைய இன்னல்களை சந்தித்து வரலாம். குலதெய்வம் என்னவென்றே தெரியாத நிலையில் சிலர் இருப்பார்கள். ஒவ்வொரு குலதெய்வத்திற்கு ஒவ்வொரு கிழமை விசேஷமாக இருக்கும். உங்கள் குல தெய்வத்திற்கு எந்த கிழமை விசேஷம் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.அந்தக் கிழமையில் ஆடி மாதத்தில் ஏதேனும் ஒரு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்நாளில் அதிகாலையில் எழுந்து குடும்பத்துடன் குளித்து முடித்துவிட்டு உங்கள் குலதெய்வத்தின் படத்தை கிழக்கு நோக்கி பார்த்தவாறு வையுங்கள்.

பெரிய வாழை இலை ஒன்றை விரித்து அதில் உங்கள் குலதெய்வத்திற்கு விருப்பமான பொருட்களை படையல் போட வேண்டும். சிலர் சுருட்டு, மூக்கு பொடி, சாராயம், மாமிசம் என்று அவரவர்களுக்கு பாரம்பரியமான குலதெய்வ படையலை படைப்பது வழக்கம். இப்போது இருக்கும் சூழ்நிலையில் உங்களுக்கு என்ன கிடைக்கிறதோ, உங்களால் என்ன முடியுமோ அதை வழக்கமாக நீங்கள் கோவிலுக்கு சென்று செய்வது போல் படையல் போடுங்கள். ஒரு தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய், மஞ்சள், குங்குமம், வாழைப்பழம் வைத்துக் கொள்ளுங்கள். பெண் தெய்வம் ஆக இருப்பின் வளையல், மஞ்சள் கயிறு கூடுதலாக வையுங்கள். ஒரு பித்தளை சொம்பில் தீர்த்தம் செய்வதற்குரிய ஏற்பாட்டை செய்து கொள்ளுங்கள்.காவல் தெய்வமாக விளங்கும் அய்யனார், கருப்பசாமி போன்ற உக்ர தெய்வங்கள் உங்கள் குல தெய்வமாக இருப்பின் அதற்குரிய அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுக்கு விபூதி குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். சைவ படையல் கொண்ட குலதெய்வத்திற்கு சைவ உணவு வகைகளையும், அசைவம் படைக்கக் கூடிய குலதெய்வத்திற்கு அசைவ உணவையும் கட்டாயம் படைக்க வேண்டும். மாற்றி படைக்கக் கூடாது.

ஒரு மண்பானையில் பச்சரிசி நிரப்பிக் கொண்டு அதனுள் காணிக்கை செலுத்த வேண்டிய நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க வேண்டும்.ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தை பயன்படுத்தலாம். குல தெய்வ பூஜையில் கட்டாயம் இடம் பெற வேண்டிய ஒரு விளக்கு என்றால் அது மாவிளக்கு என சொல்லலாம். அதனால் இரண்டு மாவிளக்குகளை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் மஞ்சலில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.தூப தீபம் காண்பித்து விநாயகரை முதலில் வணங்கிக் கொள்ளுங்கள்.பின்னர் குலதெய்வ மந்திரத்தை கட்டாயம் உச்சரிக்க செய்ய வேண்டும்.

வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் மனதிற்குள்ளேயோ அல்லது வெளிப்படையாகவோ குலதெய்வ மந்திரத்தை உச்சரியுங்கள்.

காணிக்கையை எப்போது குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடிகிறதோ அப்போது பத்திரமாக சேர்த்து விடுங்கள். கற்பூர ஆரத்தி காண்பித்து முடித்ததும் தீர்த்தத்தை படையலை சுற்றி மூன்று முறை ஊற்றிக் கொள்ளுங்கள்.குலதெய்வ மந்திரம் தெரியாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொதுவாக இருக்கும் குலதெய்வ மந்திரத்தை உச்சரிக்கலாம்.குலதெய்வ மந்திரம்: ரோகாச் சோகாச் ச தாரித்ர்யம் தெளர்பல்யம் சித்தவிக்ரியா நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா: பூஜை நிறைவடைந்ததும் குடும்பத்தலைவர் அல்லது தலைவி தானம் செய்ய வேண்டும். முதலில் பசுவிற்கு வாழைப்பழம் மற்றும் அரிசியுடன் வெல்லம் கலந்து கோ தானம் கொடுக்கலாம். அதன்பின் முடிந்த அளவிற்கு பசித்தவருக்கு அன்னதானம் அளிக்கலாம்.குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் நல்ல பலன்களை நமக்கு வாரி வழங்கக் கூடிய சிறப்புமிக்கது.

நம் குலத்திற்கே காவலாக நிற்கும் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் மேற்கொள்பவர்களின் வாழ்க்கை எப்போதும் ஏற்றகரமாக தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *