தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலமாக மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தினமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்கள் கல்வி கற்பதில் ஏற்பட்ட பின்னடைவை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கற்றல் இடைவெளியைக் குறைக்கவும் மாணவர்கள் பொது அறிவும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.