இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் விலைவாசி உயர்வு, பல மணி நேர மின்வெட்டு என மக்கள் அசாதாரணமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர். அதோடு அரசியல் குழப்பங்களும் இலங்கையில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் மக்கள் கொந்தளித்து வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்தியா கடனுதவி பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்கள் என அனைத்து வகையிலும் உதவி புரிந்துள்ளது. ஆனால் அந்த உதவிகள் அனைத்தும் இலங்கைக்கு போதாத நிலையில் வெளிநாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக மேலும் 500 மில்லியன் டாலர் இந்தியாவிடம் கடன் உதவி பெற திட்டமிட்டுள்ளதாக இலங்கை நிதி மந்திரி அலி சப்ரி கூறியுள்ளார்.