• Sat. Apr 20th, 2024

டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

Byகாயத்ரி

Dec 9, 2021

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, செப்-1ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது, நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பள்ளிகளைத் தாமதமாக திறந்ததால் பாடத்திட்டத்தில் உள்ள சில பாடங்கள் குறைக்கப்பட்டு, அவை மட்டும் தேர்வில் இடம்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், காலாண்டு தேர்வுக்கு பதில், முதல் அலகுத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடத்த வேண்டிய நிலையில், அந்த தேர்வானது திருப்புதல் தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை கமிஷனர் சார்பில், இணை இயக்குனர் கோபிதாஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: “10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வை வரும் 17-ம் தேதி துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, 10-ம் வகுப்புக்கு 17-ம் தேதி தமிழ்; 18ம் தேதி ஆங்கிலம்; 20ம் தேதி கணிதம்; 21ம் தேதி விருப்ப பாடம்; 22ம் தேதி அறிவியல்; 23ம் தேதி தொழிற்கல்வி பாடம்; 24ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு 17ம் தேதி தமிழ்; 18ம் தேதி ஆங்கிலம்; 20ம் தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்; 21ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்; 22ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண்மை; 23ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு; 24ம் தேதி கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், அரசியல் அறிவியல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட உள்ளன” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *