• Thu. Apr 18th, 2024

ஆண்டிபட்டியில் ஓட்டை, உடைசல் அலுவலகத்தில் மின்வாரிய பணியாளர்களின் அவலம்

தேனி மாவட்டத்தின் நுழைவு பகுதியாக ஆண்டிபட்டி பேரூராட்சி அமைந்துள்ளது .ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. இங்கு சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பகுதிநேர தொழிலாக பத்தாயிரம் குடும்பங்கள் நெசவுத் தொழிலை செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் ஆண்டிபட்டி மற்றும் நகர் ஒன்றிய பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்க ஆண்டிபட்டி கிழக்கு மற்றும் மேற்கு மின்வாரிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் கிழக்கு பகுதி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முற்றிலும் சேதம் அடைந்து ஓட்டை, உடைசல் உடன் காணப்படுகிறது . மேற் கூரைகள் பெயர்ந்து ,கம்பிகள் வெளியே தெரியும் படி உள்ளது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மேற்கூரை இடிந்து விழலாம் என்ற அச்சத்துடனே அலுவலர்களும், பணியாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள் .மேலும் இங்குள்ள கதவு, ஜன்னல்கள் சேதம் அடைந்து பெரிய பெரிய ஓட்டைகளாக துருப்பிடித்து காணப்படுகிறது. எனவே இரவு நேரங்களில் நாய்கள் ,பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் உள்ளே சர்வ சாதாரணமாக சென்று வரும் சூழ்நிலை உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் அலுவலகத்திற்குள் தேங்குவதால் ஆவணங்களை பாதுகாக்க முடியாமல் அலுவலர்கள் திணறி வருகின்றனர். 60 வருடத்திற்கும் மேல் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் மிகவும் சேதம் அடைந்து காட்சியளிக்கிறது. எனவே தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டிபட்டி கிழக்கு பகுதி மின் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி அலுவலர்களை நிம்மதியாக பணி செய்யவும், ஆவணங்களை காப்பாற்றவும் வழி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *