

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் அண்ணாபேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் விபத்து பிரிவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் கிரிஸ்டல் ஒப்பந்தம் நிறுவனம் மூலமாக கடந்த 10 ஆண்டுகளாக ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது கிரிஸ்டல் நிறுவனத்திற்கு மாற்றாக ஸ்மித் என்ற ஒப்பந்த நிறுவனமானது தூய்மை பணியாளர்களை நியமிக்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 55 வயதுக்கு மேற்பட்டோர் பணியாற்றக்கூடாது என ஒப்பந்த நிறுவனம் கூறியதால் இன்று பணிக்கு வந்த தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கொரோனா காலகட்டம் தொடங்கி பல்வேறு இக்கட்டான சூழலிலும் பணி புரிந்து வந்த தங்களை வயதைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்வதாக ஒப்பந்த நிறுவனம் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனவும் , ஒப்பந்த பணியாளர்களுக்கு பிஎப் மற்றும் இஎஸ்ஐ பிடிக்க முடியாது என ஒப்பந்த நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது என கூறி தூய்மை பணியாளர்கள் காலை முதலாக தங்களது தூய்மை பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் காரணமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூய்மை பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் வருகின்றனர். இது குறித்து பேசிய ஒப்பந்த பணியாளர்கள் சங்கத்தினர். :
ஏற்கனவே அரசிடமும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் எங்களது கோரிக்கை தொடர்பாக வலியுறுத்திய நிலையிலும் ஒப்பந்த நிறுவனமானது. அதனை மீறி 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற செயல்களை கைவிடாவிட்டால் தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

