• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மாட்டிறைச்சி கடைகள் மீது ஆய்வு நடத்தக் கோரி இந்து அமைப்புகள் மனு..,

ByPrabhu Sekar

Jul 21, 2026

சென்னை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், பொழிச்சலூர், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கடைகள் சட்ட விதிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்புகள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை இந்து பாரத முன்னணி மாநிலத் தலைவர் அனகை A.செல்வம், ஜெய் சிவசேனா மாநிலத் தலைவர் S.S.செந்தில், இந்து சேவா சங்கம் மாநிலத் தலைவர் ஆவடி ஸ்டாலின், இந்து பாரதம் முன்னணி அமைப்பாளர் குரோம்பேட்டை S.குமார், மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் S.M. கோபி ஆகியோர் இணைந்து வழங்கினர்.

மனுவில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் சில மாட்டிறைச்சி கடைகளில் விற்கப்படும் இறைச்சி, சட்டப்படி அனுமதி பெற்று அறுக்கப்பட்டதா என்ற சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து பாரத முன்னணி மாநிலத் தலைவர் அனகை A. செல்வம், தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1958-ன் விதிகளின்படி பசுக்கள் மற்றும் கன்றுகளை அறுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரிவித்தார்.

குறிப்பாக, 10 வயதுக்கு மேற்பட்டதும், இனப்பெருக்கம், பால் உற்பத்தி அல்லது விவசாயப் பணிகளுக்கு பயன்படாதது என கால்நடை மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் பெற்ற பின்னரே அறுக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எனவே, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கடைகள் அனைத்திலும் அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொண்டு, சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், இந்த கோரிக்கையின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அடுத்த கட்ட போராட்டம் மற்றும் முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அனகை A.செல்வம் தெரிவித்தார்.

இந்த மனு தற்போது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.