சிவகாசி அருகே உள்ள கல்லமநாயக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ – மாணவியரின் சங்கமப் பெருவிழா நிகழ்ச்சி. நடைபெற்றது. விழாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கல்வி பயின்றவர்களுடன், அப்போதைய ஆசிரியர்களோடு, தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களும், இந்த பள்ளியில் பயின்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் பேராசிரியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

முன்னதாக உயிர்நீத்த ஆசிரியர்களுக்கும், மாணவ- மாணவியருக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்வி கற்றுக் கொடுத்த மற்றும் தற்போது கல்வி கற்றுக் கொடுத்து வரும் ஆசிரியர்களை கௌரவித்த மாணவ- மாணவிகள் ஆசிரியர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வுகளை நினைவு கூறும் விதமாக பல்வேறு காலகட்டங்களில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து புகைப்படக் கண்காட்சியாக அமைத்திருந்தது அனைவரையும் ஆர்வத்துடன் கண்டுகளிக்கச் செய்தது.

வருடங்கள் கடந்து தாங்கள் படித்த பள்ளிக்கு வருகை தந்திருந்த முன்னாள்
மாணவ- மாணவியர் அணி அணியாக பள்ளி வளாகம் முழுவதையும் சுற்றிப் பார்த்ததுடன் மட்டுமின்றி , தாங்கள் அமர்ந்து கல்வி பயின்ற
வகுப்பறையை வியப்புடன் பார்வையிட்டனர்.

தங்களுடன் கல்வி பயின்ற மாணவ- மாணவியர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்தனர். தங்களது கிராமத்து அரசுப் பள்ளியில் பல ஆண்டுகளைக் கடந்து தாங்கள் முதல் முறையாக குடும்பத்தினருடன் சங்கமித்த இந்த நிகழ்வு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாக த் தெரிவித்த முன்னாள் மாணவ- மாணவியர்கள் இதுபோன்ற நிகழ்வு வரும் காலங்களிலும் தங்களது எதிர்கால சந்ததியினர் மூலமாகவும் தொடர வேண்டுமென தெரிவித்தனர்.








