• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அதிர்ச்சியில் அதிமுக… ஈபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

ByP.Kavitha Kumar

Feb 12, 2025

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து, விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடைவிதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த தடையை நீக்கக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

தேர்தல் ஆணையம், சின்னம் ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.