



இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த 9 என்னும் இழிவை நாங்கள் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று சமூக செயல்பாட்டாளரான திருநர் லிவிங் ஸ்மைல் வித்யா நடிகர் விஜய் கட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், சமீபத்தில் தனது கட்சியின் முதலாம் ஆண்டு விழாவில் இருந்து மாவட்ட நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அத்துடன் கட்சியை வலுப்படுத்த பல்வேறு அணிகளை அவர் உருவாக்கி வருகிறார். அதில் தொழில்நுட்பத்துறை அணி, வழக்கறிஞர்கள் அணி என பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் திருநர்களுக்கான அணியும் உருவாக்கப்பட்டுள்ளது.

அணிகளின் பட்டியலில் திருநர் அணியை வரிசை எண் 9 என தவெக வரிசைப்படுத்தியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. சமூக செயல்பாட்டாளரான திருநர் லிவிங் ஸ்மைல் வித்யா நடிகர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், ” இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த 9 என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்?
நடிகர் விஜய் திருநர் விங்க் என்று துவக்கியிருப்பது நல்ல விஷயம். அதை 9-ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா! இதையும் நாங்களே தான் மாரிலும், வயித்திலும் அடித்து கேட்க வேண்டும். தமிழ்கூறும் அறிவுஜீவிகள் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க ப்ளீஸ்! ” எனப் பதிவிட்டுள்ளார்.

