• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Byவிஷா

May 13, 2025

தமிழகத்தில் இன்று கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (மே 13) ஓரிரு இடங்களிலும், 14, 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 17, 18-ம் தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும், வரும் 15-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும், வரும் 16-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும். மே 12-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் 3 செ.மீ., சென்னை வளசரவாக்கம், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.