• Tue. Nov 3rd, 2026

தேனியில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது!

ByAjmalkhan saleemraja

Nov 3, 2026

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பட்டா மாறுதல் செய்து தருவதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இடைத்தரகரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர், தனது நிலத்திற்குப் பட்டா மாறுதல் செய்வதற்காக தாமரைக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகியுள்ளார்.

அப்போது, அங்கு கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வரும் வித்யா மற்றும் அவருக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட ஓட்டக்காரன் ஆகிய இருவரும், பட்டா மாறுதல் செய்து தருவதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிதாஸ், இதுகுறித்து தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி முத்துராஜ் தலைமையிலான போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை காளிதாசிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.

இதையடுத்து, இன்று தாமரைக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் காளிதாஸிடம் இருந்து இடைத்தரகர் ஓட்டக்காரன் மூலமாக பெண் கிராம நிர்வாக அலுவலர் வித்யா பணத்தைப் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.

தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலகத்தைப் பூட்டி வைத்து, பெண் கிராம நிர்வாக அலுவலர் வித்யா மற்றும் இடைத்தரகர் ஓட்டக்காரன் ஆகிய இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.