• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மாணவனை தாக்கியதாக தலைமையாசிரியர் மீது குற்றச்சாட்டு..,

ByPrabhu Sekar

Jul 25, 2026

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவனை தலைமையாசிரியர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த சுமதியின் மகன் ராகுல், அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 21-ஆம் தேதி பள்ளிக்கு சென்றிருந்த மாணவர், தலைமுடியை முறையாக வெட்டவில்லை எனக் கூறி தலைமையாசிரியர் சந்திரன் தன்னை சரமாரியாக தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தாக்குதலால் உடலில் காயங்கள் ஏற்பட்டதுடன், உடல்நலக் குறைவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதிய உணவு நேரத்தில் பள்ளிக்கு வந்த தனது தாயிடம், தலைமையாசிரியர் தன்னை தாக்கியதாக மாணவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த சுமதி சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதி அளித்ததாக கூறப்பட்டாலும், நான்கு நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய மாணவரின் உறவினர்கள், தலைமையாசிரியரை கண்டித்து திடீரென பள்ளியை முற்றுகையிட முயன்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், முற்றுகையை தடுக்க முயன்றபோது, அவர்களுக்கும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

இதன் காரணமாக ராஜேந்திர பிரசாத் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பின்னர், புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் சுமதி தனது வேதனையை வெளிப்படுத்தியதுடன், மாணவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுகுறித்த மேலதிக விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்