தாம்பரம் மெப்ஸ் தொழிற்பேட்டை வளாகத்தில் பணியாற்றி வந்த காவலாளி ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கடப்பேரி நேரு நகரைச் சேர்ந்த 65 வயதான முனியன், தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் இங்கா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக காவலாளியாக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு வழக்கம்போல் பணிக்குச் சென்ற முனியன், இன்று அதிகாலை நிறுவனம் அருகே ரத்த வெள்ளத்தில் முகத்தின் இடது பகுதியில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாம்பரம் காவல் ஆய்வாளர் செல்லதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முனியனின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அதே நிறுவனத்தில் பணியில் இருந்த இரண்டு காவலாளிகளை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின் முடிவில் முனியனின் மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் நடந்த இந்த மர்ம மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




