புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இன்று 10.9.2026 கல்லூரிப் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவின் துவக்கமாக விலங்கியல் துறையின் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர்.ஆ.நாகசத்தியா வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர்.கி. நிர்மலா அவர்கள் தலைமையுரையாற்றுகையில் பேரவையில் பொறுப்பேற்கும் மாணவிகள் சிறந்த கல்வியாளராக திகழ்வதோடு மட்டுமல்லாது நல்ல ஒழுக்கமும், தலைமை பண்பும் உடையவர்களாக திகழ வேண்டும், மேலும் கல்லூரியின் மாண்பை பாதுகாக்கும் பொறுப்பாளர்களாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பேரவை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் முதல்வர், முனைவர். மா. அன்புச்செழியன் பேரவையைத் தொடங்கி வைத்து விழா சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில் நம் கல்லூரி உருவான வரலாறு மற்றும் பெண் கல்விக்கான முக்கியத்துவம் பற்றியும் அதில் மாணவிகளின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் மாற்றம் என்பது ஜனநாயகத்திற்காகவே இருக்க வேண்டும் என்றும் இன்று பேரவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்கும் மாணவிகள் தான் கற்ற கல்வியை சமூகத்திற்கு கொண்டு சென்று களப்பணி ஆற்றிட வேண்டும்.

பேரவைத்தலைவர் என்பது மாணவிகளுக்கு படிக்கும் போதே தலைமைப் பண்பை வளர்ப்பதற்கு கல்லூரியில் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். எனவே என்னால் முடியும் என்று எதிர்கால சாதனையாளர்களாக உருவாக வேண்டும் என்று தனது சிறப்புரையில் கூறினார்.

விலங்கியல் துறையின் இணைப் பேராசிரியர் வேதியல் துறைத் தலைவர் பொறுப்பு வகிக்கும் முனைவர் அ.மேரி ஹெலிதா, துறைவாரியாக பேரவை உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்பு பேரவை உறுப்பினர்கள் அனைவரும் விழா மேடையில் சிறப்பு விருந்தினர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவின் நிறைவாக கல்லூரியின் பேரவைச் செயலாளர், விலங்கியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி பா.ஜெயஸ்ரீ நன்றியுரை வழங்கினார்.








