• Thu. Mar 28th, 2024

காங்கிரஸுக்கு ஹர்திக் படேல் முழுக்கு?

குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் பாஜகவுக்கு தாவுவது உறுதியாகி உள்ளது.

தமது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவியை ஹர்திக் பட்டேல் நீக்கியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் நிலை உள்ளது. குஜராத் சட்டசபையின் பதவி காலம் டிசம்பர் மாதம் வரை இருந்தாலும் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்றே கூறப்படுகிறது.

குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றும் எண்ணத்தில் ஆம் ஆத்மி பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், சட்டசபை தேர்தலை பாஜக முன்கூட்டியே நடத்தக் கூடும். நீங்கள் எப்போது தேர்தல் நடத்தினாலும் நாங்களே வெல்வோம் ஆட்சி அமைப்போம் என்றார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியோ வழக்கம் போல உட்கட்சி மோதல்களால் சீரழிந்து கொண்டிருக்கிறது. குஜராத்தில் தேர்தல்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடிய பட்டிதார் சமூகம் 2015-ல் இடஒதுக்கீடு கேட்டுப் போராடியது. எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள்- இல்லை எனில் இடஒதுக்கீட்டு முறையையே ஒழித்து கட்டுங்கள் என்பது அந்த குரல். இப்போராட்டங்களுக்கு தலைமை வகித்தவர் ஹர்திக் படேல் என்ற இளைஞர். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதிரடி காட்டினார் ஹர்திக் படேல்.

ஆனால் அண்மை காலமாக காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் ஹர்திக் படேல். குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியில் தலைதூக்கிவிட்ட உட்கட்சி மோதல்களை தொடர்ந்துதான் ஹர்திக் படேல் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். அத்துடன் நிற்காமல் பாஜகவை இடைவிடாமல் புகழ்ந்து தள்ளுகிறார். மேலும் ஆம் ஆத்மி கட்சியுடன் ஹர்திக் படேல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தாம் காங்கிரஸில் இருந்து விலகுவதை உறுதி செய்யும் வகையில் தமது ட்விட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் செயல் தலைவர் பதவி என்பதை ஹர்திக் நீக்கியுள்ளார். காங்கிரஸில் இருந்து விலகிய பலரும் இதே பாணியைத்தான் ஏற்கனவே பின்பற்றி இருந்தனர். இதனால் குஜராத் காங்கிரஸுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஹர்திக் படேல் எந்த நேரத்திலும் குட்பை சொல்லிவிட்டு போகலாம் என்றே கூறப்படுகிறது இதனால் குஜராத் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *